Tuesday, 17 October 2017

தீபாவளி

வணக்கம். எப்படி இருக்கீங்க?

நான் நலம். தீபாவளி அதுவுமா இங்கே உட்கார்ந்து என்ன செய்றீங்க?

ஒண்ணும் இல்ல செய்ய அதான் இங்கே பொழுது போக உட்கார்ந்து இருக்கிறேன்.

உங்கள் மக்கள்? மனைவி?

எல்லாம் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருக்கின்றார்கள். என்னை யாரும் கண்டுக்கல.

ஏன் அப்படி? எந்த மனைவியுடன் இருக்கீங்க இப்போ?

யாருடனும் இல்லை. மூனு பேரும் கூட்டணி சேர்ந்து என்னை புறக்கணித்தார்கள். நான் இப்படி இந்த கடையில் நேரத்தை கழித்து தூங்கும் நேரம் மட்டுமே வீட்டுக்கு போகிறேன்.

ஏன்?

அவர்கள் பேசும் பேச்சு. அப்பப்பா! நாக்கை பிடுங்கி செத்து போகலாம்.

உங்களுக்குள் என்ன பிரச்சினை? நல்லா தானே இருந்தீங்க, எத்தனை மக்கள் உங்களுக்கு?

மூன்று பேருக்கும் மொத்தம் 13 பேர். அதில் ஒருவன கார் விபத்தில் இறந்து போனான்.

ஓ. மன்னிக்கனும். மற்றவர்கள்?

8 பெண் பிள்ளைகள். எல்லார்க்கும் கல்யாணம் முடிந்து அவரவர் புருசன் வீட்டுக்கு போய்விட்டார்கள்.

நீங்கள் ஏன் அவர்கள் வீட்டுக்கு போகல? அங்கே இந்த பெருநாளைக் கொண்டாடலாமே?

என்னை யாரும் சேர்த்துக்கல. அது இதுனு என் மேலே பழி சுமத்துகிறார்கள்.

அப்படி என்ன உங்கள் குற்றம்?

ஹ்ம்ம். மூன்று குடும்பத்தையும் சரியாக கவனிக்காமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து மக்களை நிராகரித்தது என் குற்றமாம். இப்போது எல்லாரும் சேர்ந்து என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். சின்ன வயசுல ஆடின ஆட்டத்திற்கு இப்போ அனுபவிக்கிறேன்.

இதற்கு என்ன தான் தீர்வு? ஒண்ணும் நீங்கள் முயற்சி செய்யலயா? ஒரு பிள்ளை கூட உங்களுக்கு ஆறுதலாக இல்லையா?

எல்லார்க்கும் என்னை பிடிக்கல. அவர்களை குத்தம் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. என் மேல் நிறைய தவறு இருக்கிறது. ஹ்ம்ம்ம். பெரு மூச்சு விட்டு விட்டு காலத்தை போக்க வேண்டியது தான்.

சரி சரி. கவலை பட வேண்டாம் நீங்கள். என்னுடன வாங்க. அந்த கடையில் நல்ல இட்லி கிடைக்கும். பசியாறியதும் உங்கள் பொழுதை  எப்படி சரியாக போக்கலாம்னு ப்லான் போடலாம்.

அது சரி. என்ன சொல்லிட்டு, நீங்கள் மட்டும் ஏன் இங்கே வந்து அதுவும் கடையில் இட்லி சாப்பிட போறீங்க? உங்கள் மக்கள், கணவர்?

எல்லாம் இருக்கிறார்கள். அவர் அவர் வீட்டில். எனக்கு இதில் எல்லாம் அத்தனை விருப்பம் இல்லை.

ஏன்? உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள ஒதுக்கிட்டாங்களா என்ன?

இல்லை, இல்லை. எந்த வீட்டிற்கு போனாலும் எனக்கு எல்லா பராமரிப்பும் கிடைக்கும். நானே இப்படி தூரமாக விலகி இருக்கிறேன். மற்ற நாட்களில் எல்லோரையும் பார்ப்பது உண்டு. தீபாவளி மட்டும் கொஞ்சம் அலெர்ஜி!

ஏன் அப்படி? தீபாவளிக்கும் உங்களுக்கும் என்ன பகை.

பகை இல்லை. வாழ்க்கையில் நடந்த ஒரு துயரம். அது துரதிர்ஷ்டவசமா தீபாவளிக்கு நடந்து விட்டது.

அப்படி என்ன துயரம்?

எனக்கு முக்கியமான ஒருவர் தீபாவளிக்கு முதல் நாள் கார் விபத்தில் இறந்து போனார். அவரை தீபாவளி அன்று எரித்து கடலில் கரைத்து கதையை முடித்து விட்டார்கள். இந்த நாளை கொண்டாட முடியல.

ஹ்ம்ம். கொஞ்சம் கஷ்டம் தான். கவலைப்பட வேண்டாம்.

கவலைனு சொல்றதுக்கு இல்லை. காலம் காயங்களை மறைய வைத்தது. இது ஏதோ ஒரு விரக்தி போல.  வேலைகளில் மூழ்கி நாட்கள் ஓடுகின்றது. எது எப்படி இருந்தாலும் என்னைவிட நிறைய கஷ்டப்படுபவவர்களைப் பார்க்கும் போது என் வாழ்க்கை சிறப்பானதுனு உணரும் எனக்கு வாழ்க்கை இனிமையான ஒன்றுதான்.

உங்கள் மன உறுதியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு.

ஹ்ம்ம். என் கதை ஒரு பக்கம் இருக்கட்டும். எங்கள் இல்லத்தில் வேலை செய்ய வருகிறீர்களா?

வேலையா? எனக்கு 70 வயது ஆகிறது. என்னால் நிறைய வேலைகளை செய்ய முடியாது.

பெரிய வேலை கிடையாது. எங்கள் இல்லத்தில் பிள்ளைகளுக்கு தாத்தாவாக இருங்கள். உங்களுக்கு தெரிந்த கதை சொல்லுங்க. உங்களுக்கும் பொழுது போகும், குழந்தைகளுக்கும் ஒரு நல்ல அனுபவமாகும். என்ன சொல்றீங்க? உங்களுக்கு உணவு கொடுத்து விடுவோம். நீங்கள் செய்யும் உதவிகளுக்கு சிறு சன்மானமும் கொடுப்போம்.

ரொம்ப நன்றி. கரும்பு தின்ன கூழியா என்ன? சந்தோஷமா இருக்கு. இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்.

இது உதவி இல்லை, வேலை வாய்ப்பு. ;)




1 comment: